அவன் அந்த கடிதத்தை எழுதி முடித்த போது மழை ஆரம்பித்து இருந்தது. அந்த சிம்னி விளக்கு எண்ணைக்காக கெஞ்சிக்கொண்டு ஜுவாலை குறைத்து கூட்டி நடனமாடியது. நீண்ட நாட்களாக தூக்கம் இல்லாத களைப்பு அவனிடம் நடுக்கமாக வெளிப்பட்டது. மணி அதிகாலை நான்கு என அலமாரியில் இருந்த கடிகாரம் காட்டியது.
அவன் மேஜையில் கட்டிட பொறியாளர்கள் உபயோகிக்கும் உபகரணங்கள் சிதறி கிடந்தன.
ஏதேதோ படங்கள் வரையப்பட்டு பெரிய பழைய காகிதங்கள் அடுக்கி இருந்தன. அந்த சிறிய மர வீட்டில் ஓரத்தில் கற்பாறை மேல் மரக்குச்சிகள் எரிந்து புகைந்தன.
அவன் தூங்கி விட்டான். கடந்த வாரத்தில் அவன் தூங்குவது இது இரண்டாவது முறை. அதிகபட்சமாக மூன்று மணி நேரம் தூக்கம் தான். அவன் வீடு நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் ஒரே ஒரு அறை கொண்ட சிறிய வீடு. அந்த சிறிய வீட்டில் உள்பக்கமாக ஐந்து தாழ்பாள்கள் போடப்பட்டு இருந்தன. சுவற்றின் ஒரு பக்கத்தில் முழுவதுமாக அலமாரியாக மாறி அந்த வீட்டின் புழங்கும் இடத்தை மேலும் குறைத்தது. அலமாரியில் வேதியல் கூடத்தில் இருப்பது போல் சிறிய பெரிய கண்ணாடி குடுவைகள் மருந்துடன் இருந்தன.
மழை அடித்து ஓய்ந்து இருந்தது. வெளியே நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் பறந்தன. அவன் தூங்கி எழுந்து விட்டான். இந்த நாளுக்காக அவன் மிக ஆர்வமாக காத்துக்கொண்டு இருந்தான். எழுதிய கடிதத்தை மடித்து மேஜை ஓரத்தில் இருந்த சிறிய மரப்பெட்டியில் வைத்து மூடினான். மூடிய பெட்டியை பார்த்து மெலிதாக புன்னகைதான்.
வாசல் அருகே நின்றிருந்த துரு பிடித்த மிதிவண்டியை எடுத்து பெட்டியை அதன் பின்னால் வைத்து கட்டினான்.வீட்டை பூட்டிவிட்டு நகரத்தை நோக்கி மிதிவண்டியை அழுத்த தொடங்கினான்.
-
"ப்ரபசர், இது நீங்க தவறவிட்ட பார்சல். பார்கிங்ல கிடந்தது."
"இதுவா ? இது என் கையெழுத்து இல்லையே .. சரி நான் பார்த்து கொள்கிறேன். தேங்க்ஸ்.."
-
"ஆபீசர், இது பார்கிங்கில் கிடந்தது என்று ஒரு பெண் கொடுத்தாள். இது என்னுடையது இல்லை. அதனால் போலீஸ் ஆகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன்."
"கவலை வேண்டாம் ப்ரபசர். நான் பார்த்து கொள்கிறேன்."
"இது என்ன பார்சல்லாக இருக்கும் ? சிறிது நேரம் கழித்து திறந்து பார்போம்."
ஆபிசர் அழகாக இருந்த அந்த மர பார்சலை திறந்த அடுத்த நொடி அது " டமார் " என வெடித்தது. காயப்பட்ட ஆபீசர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
-
பேப்பரில் இந்த செய்தி ஒரு ஓரமாக வந்தது. தனது முதல் வெற்றியை ருசித்த களிப்பில் அடுத்த வேலைக்காக தயாராக ஆரம்பித்தான்.
-
இவன் டெட் கசென்ச்கி (Ted Kaczynski) . அமெரிக்காவில் FBI-யால் மிக தீவிரமாக 17 வருடமாக தேடப்பட்ட கொலைக் குற்றவாளி. அமெரிக்க பத்திரிகைகள் இவரை Unabomber என அழைத்தன. இவர் University-களுக்கும் Airline-களுக்கும் வெடிகுண்டுகளை பார்சல் செய்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டார்.
மிக சிறந்த அறிவாளி என சிறு வயதில் பெயரெடுத்த இவன், அதிக IQ திறனால் தன்னை விட அதிக வயதினருடன் படித்தான். பதினாறு வயதில் கல்லூரியில் சேர்ந்த இவன் இருபத்தைந்து வயதில் ப்ரபசர் ஆகிவிட்டான்.
அரசாங்களின் இயற்கை விரோத திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு எதிராக , சுயமாக வெடிகுண்டு தயாரிக்க பழகி, பல்வேறு நபர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி திகில் ஏற்படுத்தினான். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அடுத்தடுத்த குண்டுகளில் சேதம் அதிகமாகும்படி பார்த்து கொண்டான். சிறிய காயங்களில் ஆரம்பித்து, ஊனப்படுதுவது என தொடர்ந்து, உயிரிழப்பு வரை இவனது வெடிகுண்டுகள் ஏற்படுத்தின. ஒவ்வொரு குண்டும் விதவிதமான முறையில் செய்யப்பட்டு, அழிவை ஏற்படுத்தின. வெடிகுண்டு நிபுணர்கள் இவனின் ஆயுத தொழில்நுட்பம் கண்டு வியந்தனர்.
மேலும், பொது கழிப்பிடங்களில் இருந்து யார் என்றே தெரியாதவரின் முடிகள் கொண்டுவந்து பாம்களில் வைத்து அனுப்பினான். வெடிகுண்டு என கண்டுபிடித்து செயலிழக்க செய்தாலும், காவல் அதிகாரிகள் இந்த முடிகள் கொலைகாரனுடையதாக இருக்கலாம் என தவறான தேடுதல் வேட்டை நடத்தினர்.
17 (1978 - 1995) வருடங்களாக 23 பேரை காயப்படுத்தி , மூவரை கொன்ற இவன், தனது கோரிக்கைகளை ஐம்பத்திஆறு பக்க கட்டுரையாக எழுதி நாளிதழுக்கு அனுப்பினான். அந்த கட்டுரை இவன் கடிதத்தில் எழுதுவது போல் இருப்பதாக இவனது சகோதரன் போலீஸ்க்கு துப்பு கொடுக்க, போலீஸ் இவனை கைது செய்தனர். இவனை கைது செய்த பொழுது ஒரு பாம் பார்சல் ரெடியாக அனுப்ப தயாராக வீட்டில் இருந்தது.
நல்ல அறிவு, படிப்பு, வேலை கிடைத்தாலும், அதை உதறி விட்டு உலகுக்கு எதிராக போர் தொடுத்த தனி ஒரு மனிதன் இவன். தற்போது ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய தண்டனை அனுபவித்து வருகிறான்.
No comments:
Post a Comment